011

மொழிகளின் மரணம்

- ச. பாலமுருகன் - மனித உரிமைச் செயல்பாட்டாளர், எழுத்தாளர்

கடந்த 2010-ல் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வாழ்ந்த சுமார் எண்பத்தைந்து வயதான போவசர் என்ற போ பழங்குடிப் பெண் இறந்துபோனாள். உலகின் மாபெரும் சோக நிகழ்வுளில் ஒன்று இது. ஏனெனில் அந்த மூதாட்டி மட்டுமே தனது தாய்மொழியான போ மொழியை அறிந்திருந்த கடைசி மனுஷி. அவள் மரணத்தோடு போ மொழிக்கும் மரணம் நிகழ்ந்துவிட்டது. அந்தப் பழங்குடி இனம் சுமார் 65,000 வருட வாழ்க்கை அனுபவத்தை பெற்றிருந்த இனம்.

கடந்த 1970-ல் ‘பெரும் அந்தமானிகள்’ (Great Andamanese tribes) என்று குறிப்பிடப்பட்ட பத்து அந்தமான் பூர்வகுடிகளைச் சேர்ந்த சுமார் 5000 பேரை போர்ட் பிளேயர் அருகில் சிறு தீவில் இந்திய அரசு குடியேற்றியது. அவர்களுக்கு ரேஷன் பொருட்களையும் மாதம் உதவித்தொகையாகப் பணமும் வழங்கியது. இப்பழங்குடிகள் மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டனர். புதிய நோய்களின் தாக்கத்தால் பெரும்பாலான பழங்குடிகள் விரைவிலேயே செத்துப்போனார்கள். தற்போது மிஞ்சி நிற்பது வெறும் 52 பேர் மட்டுமே. அவர்களில் போவாசர் மட்டுமே போ மொழியின் கடைசிப் பெண். அந்தமான் தீவுகளின் வடக்குப் பகுதியைத் தாயகமாகக் கொண்டிருந்த போ மொழியின் மரணம் ஆயிரக் கணக்கான ஆண்டு கால ஒட்டுமொத்த வாழ்க்கை அனுபவத்தையும் சாகடித்துவிட்டது. இதுபோன்றே 1976-ல் தான்சானியாவில் ஆசக்ஸ் மொழியும் 1992-ல் துருக்கியில் டெநிக் எசன் என்ற மனிதனின் மரணத்தோடு உபய் மொழியும் 2003-ல் ருஷ்யாவில் அக்கல சாமி என்ற மொழியும் மரித்துப்போயின. 2008-ல் அமெரிக்காவின் அலாஸ்காவில் மரியா ஸ்மித் ஜோன் என்பவரின் சாவோடு இயாக் மொழியும் செத்துப்போனதை யுனஸ்கோ உறுதிசெய்துள்ளது.

உலகில் சுமார் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 78 சதவீத மக்கள், பரவலாக அறியப்பட்ட 83 மொழிகளைப் பேசுகின்றவர்கள். மீதி உள்ளவர்கள் ஆதிகுடிகள் என்று அறியப்பட்ட மக்கள். இவர்கள் சிறு குழுக்களாக வாழ்ந்துவருபவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருப்பதில்லை. வாய்மொழியாக ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறைக்கு அந்த மொழிகளைத் தந்துசெல்கிறது. இந்த மொழிகளும் இயற்கையான அடிப்படை இலக்கணப் பண்புகளைக் கொண்டுள்ளன. இலக்கணங்கள் மனித மனங்களில் இயற்கையாகவே உள்ளதாக மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி குறிப்பிட்டது இப்பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் பொருந்தக்கூடியது.

ஒரு மொழி பேசும் மக்கள் அந்த மொழி பேசுவதைக் கைவிடுவது அல்லது அந்த மொழியின் வடிவங்களைச் சிதைப்பது மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு அந்த மொழியைக் கொண்டுசெல்லாது விடுவது அல்லது குறிப்பிட்ட அந்த மொழிக்கு அரசும் ஊடகங்களும் தரும் முக்கியத்துவம்குறைதல், அந்த மொழியில் உள்ள படைப்புகள் ஆவணப்படுத்தல் குறைதல் போன்ற நிகழ்வுகள் ஒரு மொழியைச் சாகும் தருவாயில் உள்ள மொழியாகக் கருத இடம் தருகின்றன.

முக்கியமாக, குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கு அந்த மொழி மீதான ஈர்ப்பின்மை அந்த மொழியின் அழிவில் பெரும் பங்கு வகிப்பதாக யுனெஸ்கோ நிறுவனம் கருதுகிறது. இந்த வகைப்பாட்டின்படி உலகில் வேகமாக மொழிகள் செத்துக்கொண்டிருக்கும் நாடுகளில் முன்னணி வகிப்பது நமது இந்தியா. தற்போது சுமார் 850முதல் 900 மொழிகள் வரை பேசப்படும் நமது நாட்டில் கடந்த 1961-ல் 1600 மொழிகள் பேசப்பட்டுவந்ததாக ஆய்வறிக்கைகள் உறுதிசெய்கின்றன. இந்தியாவில் 172 மொழிகள் செத்துக்கொண்டிருப்பதாக 2010-ல் யுனஸ்கோ கூறியது. இதில் 71 மொழிகள் காப்பாற்றவே இயலாத நிலைக்குச்சென்றுவிட்டதாகவும், 101 மொழிகள் மெல்லமெல்லச் சாவதாகவும் அந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த மொழிகளைக் காக்க நமது ஆட்சியாளர்கள் போதுமான தொலைநோக்கு முயற்சிகளை எடுக்கவில்லை.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையின் கீழ் அங்கீகாரம் பெற்ற பட்டியல் மொழிகளாக தற்போது 22 மொழிகள் உள்ளன. சுமார் 97 சதவீத மக்கள் இந்த மொழிகளைப் பேசுகிறார்கள். அதே சமயம் 3 சதவீத மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள். இந்த மக்களின் மொழிகளை அம்மக்கள் வாழும் மாநிலத்திலோ மாவட்டத்திலோ எந்த அங்கீகாரத்துக்கும் சரி அரசுடனான தொடர்புக்கும் சரி பயன்படுத்தவே முடியாது. கல்வி என்பது இவர்கள் மொழியில் கிடையாது. மேலும் 10 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசும் மொழி கணக்கெடுப்பில்கூட மொழியாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த மக்கள் தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் மாநில மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாநில மொழியில் அல்லது அரசாங்க மொழியில் கரைந்து சுய அடையாளம் இழந்தால் மட்டுமே வாழ முடியும்.

அரசின் ஜனநாயகமற்ற பார்வையும் மொழிகள் அழிவதற்கு முக்கியக் காரணம். பழங்குடி மொழிகளில் போடோவும் சந்தாலும் தவிர மற்ற மொழிகள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் அங்கீகரிக்கப்படாத பழங்குடி மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையோ 90 லட்சத்திற்கும் மேல்.

தமிழ்நாட்டில் 36 வகையான பழங்குடி மொழிகள் அம்மக்களால் பேசப்படுகின்றன. இவை தனித்துவமான கதைகளையும் வரலாற்றையும் பாடல்களையும் பழமொழிகளையும் கொண்டுள்ளன. இருளர்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட அரிய பாடல்களையும் அவற்றில் உள்ள கதைகளையும் சமீபத்தில் கவிஞர் லட்சுமணன் ‘சப்தே கொகலு’ (ஊமை நாயனம்) என்ற நூலில் திரட்டியுள்ளார். அந்த இருளர்ப் பாடல்கள் அவர்களின் நெடுங்கதைகள், வரலாறு, காதல், தாயால் மதிக்கப்படும் மகளின் காமம் என புதிய ஒரு உலகை காட்டுகின்றன. அதுபோலவே ஒவ்வொரு பழங்குடிப் பாடலும் இசையும் தனிச்சிறப்பும், உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டதாக உள்ளது.

அடுத்த பழங்குடித் தலைமுறை பழங்குடி மொழியைப் பேசுவது இழிவு என்றோ பயனற்றது என்றோ கருதும் மனத்தடை நமது சூழலில் உருவாகியுள்ளது. அந்த இளைஞர்கள் தங்கள் மொழிகளைக் கைவிடுகிறார்கள். அவர்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களைப் பேண முடியாமல் தமிழோடு ஒன்றாய்க் கலப்பதை ஆரோக்கியமானதாகக் கருத இயலாது. இந்த மொழிகளை ஆவணப்படுத்திப் பாதுகாப்பது முக்கியம். அவை விரைவில் நம் கண் முன்னே அழியப்போவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

ஜனநாயகச் சமூகத்தில் சமத்துவம் அடிப்படைக் கொள்கையாக உள்ளது, எந்தக் குடிமகனும் தனது நிறம், பிறப்பு, சாதி அல்லது மொழி வேறுபாட்டால் கண்ணியக் குறைவாக நடத்தப்பட முடியாது என்பதே அந்தச் சமத்துவக் கோட்பாடு. எனில், ஆதிகுடிகளின் மொழிகளும் வாழ்க்கையும் பறிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு ஏன் சாகடிக்கப்படுகின்றன?

சமூகம் இந்த வலியைத் தன்னுடையதாகக் கருதாமல் புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசம். உலகில் ஒவ்வொரு 14 நாளிலும் ஒரு மொழி தனது சாவை எதிர்கொண்டிருக்கிறது. இந்தச் சாவை மனித குலம் தனது குழந்தையையோ அல்லது ஆசானையோ இழக்கும் ஒரு சாவாகவே நாம் கருத வேண்டும். மொழியின் மரணம் என்பது மனித குல வரலாற்றின் மரணம் தவிர வேறென்ன?