014

கார்ப்பரேட்டுகள் கற்றுத்தந்த பாடம் ! ?

ஆர்.எஸ். நாராயணன் .... ( குழும மின் அஞ்சலில் 30-9-2013 அன்று வந்த கட்டுரை )

இன்றைய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு நிஜமான காரணம், அரசின் ஊதாரிச் செலவுகளா? கார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன்களின் உயர்வா? இறக்குமதியில் ஓவர் இன்வாய்சிங் செய்து உயர்ந்த கறுப்புப் பணமா? முதலீட்டு இயந்திர இறக்குமதிகளா? தங்க இறக்குமதிகளா? எண்ணெய் இறக்குமதிகளா? மூலதன அபேதா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். நிதியமைச்சரையும் பிரதமரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விமர்சனம் செய்வோர், இந்திய ரூபாய் வீழ்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் கார்ப்பரேட்டு ஊழல்களை மறந்து விடலாமா? மைய அரசையும் கார்ப்பரேட்டையும் பிரித்துப்பார்க்க முடியாதவாறு ஊழல் உடன்பாடுகள் உண்டெனினும், பிரித்து நோக்கினால்தான் பிரச்னைகள் புரியும்.

1991ஆம் ஆண்டு நிலையுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டால் உண்மை புரியும். 1991இல் அன்னியக்கடன் இருப்பு 83.80 பில்லியன் டாலர். இது இந்திய உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) 7.6 சதவீதம். இதில் 48.59 பில்லியன் டாலர் அரசின் பங்கு (60 சதவீதம்) என்ற சூழ்நிலையில் செலவுக் கட்டுப்பாடு பலன் தந்தது.

அன்னியக்கடன் சாராத நிதி சேமிப்பு, அனைத்துலக நிதியம், உலக வங்கி உதவி என்று 1991இல் சமாளிக்கப்பட்டதைப்போல் இப்போது முடியாது. ஏனெனில் அரசு பங்கைவிட கார்ப்பரேட்டுகளின் அன்னியக்கடன் பங்கு கூடிவிட்டது.

அண்மை நிலவரத்தைப் பறைசாற்றும் ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி 2013 மார்ச் முதல் காலாண்டு நிலவரப்படி நமது அன்னியக்கடன் 390.05 பில்லியன் டாலர். இதில் அரசின் பங்கு 81.65 பில்லியன் டாலர் மட்டுமே. அதாவது 21 சதவீதமே அரசு முத்திரை அன்னியக்கடன். மீதி 79 சதவீதம் அரசு சாராத கார்ப்பரேட்டுகளின் அன்னியக்கடன். 1991இல் கார்ப்பரேட்டுகளின் அன்னியக்கடன் பங்கு 12 சதவீதமாயிருந்தது. இன்று கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசு சாராத அன்னியக்கடன் 79 சதவீதமாக உயர்ந்துள்ளபோது இப்போது எடுக்கக் கூடிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஒரு பலனையும் தராது என்றாலும் அப்படி எடுக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும்.

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை கட்டுக்குள் வைத்திருந்த கவர்னர் டி. சுப்பாராவ் ஓய்வு பெற்றுவிட்டாலும், நானி பல்கிவாலாவின் 10-ஆம் ஆண்டு நினைவு விழாவில் அவர் நிகழ்த்திய உரையில் இன்றைய இழிநிலைக்கு நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது மறைமுகத் தாக்குதல் இருந்தது. இன்றைய நிலவரத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டிய நிதியமைச்சரின் நிதிக் கொள்கையில் அன்னியக் கடன் வரவில் மேற்கொண்ட தாராள மனப்பான்மையே கார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன் உயர்வுக்கு முக்கியக் காரணம். ரிசர்வ் வங்கி, அரசின் பட்ஜெட் கொள்கையைத்தான் கட்டுப்படுத்தும். கார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன் உயர்வை நிதியமைச்சரகம் கண்காணிக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன் பற்றிய புள்ளிவிவரப்படி முந்நிலையில் உள்ள அனில் அம்பானி 1.14 லட்சம் கோடி, வேதாந்தா 1 லட்சம் கோடி, எஸ்ஸார் 98 ஆயிரம் கோடி, அடானி 81 ஆயிரம் கோடி, ஜெய்பீ 64 ஆயிரம் கோடி, ஜே.எஸ். டபிள்யூ, ஜி.எம்.ஆர். லேன்கோ ஒவ்வொன்றும் 40 கோடி. வீடியோகான், ஜி.வி.கே ஒவ்வொன்றும் 25 ஆயிரம் கோடி. சிறிய அளவில் கோடிக்கு மேல் பற்பல சிறுசிறு கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்னியக் கடன்களும் நிறைய உண்டு.

மேற்படி கார்ப்பரேட்டுகள் அன்னியக் கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவில் வருமானம் இல்லாமல் இந்திய அரசைவிட மோசமான நிலையில் உள்ளதாகத் தகவல்கள் உள்ளன. கடனைத் திருப்ப முடியாவிட்டாலும் வட்டியை வழங்கவாவது வழி உள்ளதா? அன்னியக் கடன் வட்டியைச் செலுத்தும் அளவில் கூட லாபம் இல்லையாம். மாபெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்னியக் கடன்களைவிட மைய அரசின் அன்னியக் கடன் குறைவு என்றாலும் உற்பத்தியின்மையால் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சித் திட்டங்கள் உயிர்ச் சூழல் பாதுகாப்பு, குடிபெயர்ப்பு, நில உரிமைப் பரிமாற்றம் போன்ற பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளன. ஆகவே இந்திய கார்ப்பரேட்டுகள் வேறு ஆசிய நாடுகளில் தொழில் தொடங்கி புதிய கடன்களை வாங்கி புதுமையாக ஏமாற்ற வழி தேடலாம். அரசுகளுடன் நல்லுறவு கொண்டு தேர்தல் நிதி கமிஷன் எல்லாம் வழங்கி இந்திய அரசையும் உலகையும் ஏமாற்றுவதில் வல்லவராகக் காட்சிதரும் கார்ப்பரேட் மன்னர்களில் அனில் அம்பானி முதலிடம் பெற்றுள்ளதில் வியப்பேதுமில்லை.

இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தன? டாலரைவிட ரூபாய் வலுவாக எண்ணப்பட்ட காலகட்டத்தில், டாலரின் வீழ்ச்சி என்று பேசப்பட்ட காலகட்டத்தில், யூரோவின் வீழ்ச்சி என்று பேசப்பட்ட காலகட்டத்தில் குறைவான வட்டிக்கு அன்னியக் கடன் கிடைத்தபோது, இந்திய கார்ப்பரேட்டுகள் அள்ளிக் கொண்டார்கள். 2006 - 07இல் 26,100 கோடி

அளவில் அன்னியக் கடன் வாங்கிய அனில் அம்பானி 2012 - 13இல் 1.14 லட்சம் கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கியுள்ளார். இந்தியாவில் அனில் அம்பானி உட்பட பத்து மாபெரும் கார்ப்பரேட்டுகள் மட்டும் 2006 - 07இல் 99,300 கோடி ரூபாய் அன்னியக் கடன் வாங்கிய நிலை 2012 - 13இல் 6.31 லட்சம் கோடி ரூபாயாக அன்னியக் கடன் உயர்ந்து விட்டது.

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன துணிச்சலில் அன்னியக் கடன்களைப் பெற்றன? எல்லாம் நமது நிதி அமைச்சரின் கருணாகடாட்சமே. ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் டாலர் என்ற அளவில் அனுமதித்து, கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டார். 500 மில்லியன் டாலர் என்பது 750 மில்லியன் டாலராக அன்னிய வர்த்தகக்கடன் எல்லை உயர்த்தப்பட்டது.

உள்ளூரில் உள்ள தனிப்பட்ட பைனான்சியரிடம் 2 வட்டி 3 வட்டி என்று ஒருவர் கடன் வாங்கும்போது சொத்துகளைப் பிணையம் வைத்து மீட்க வழியில்லாமல் சொத்தை இழப்பார். அன்னிய நாட்டு ஃபைனான்சியரிடம் எதைப் பிணையம் வைக்கிறார்கள்?

இந்திய அரசையே பிணையம் வைத்துக் கடன் வாங்குவது கார்ப்பரேட்டுகளின் சாமர்த்தியம். அரசு தன் மீது நம்பிக்கை இல்லாமல் கார்ப்பரேட்டுகளை நம்பி வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கியது. அரசு நடத்தும் தொழிலில் நஷ்டம் ஏற்படும். கார்ப்பரேட்டுகளின் தொழிலில் முதலுக்கே மோசம் வந்து விடும்.


உண்மையில் இப்படி அன்னியக் கடன் வாங்கியுள்ள கார்ப்பரேட்டுகளுக்கு அசையாத சொத்துகள் உண்டா? அப்படியே சொத்து இருந்தாலும் வாங்கிய கடனுக்கு ஈடுகட்டுமா? நல்ல பாரம்பரியம் உள்ள டாட்டா, பிர்லா, கோத்ரஜ், முகேஷ் அம்பானி போன்றோர் நீங்களாக அன்னியக் கடன்களை அரசின் பிணையங்களைப் பெற்று வாங்கிய கார்ப்பரேட்டுகளில் பலர் லெட்டர் பேட் - அச்சடித்த தாள் நிறுவனங்கள், ""உங்கள் முதலைப் போட்டு லாபம் எடுத்து வட்டியும் முதலுமாகச் சேர்த்து வழங்குவோம்"" என்று பிரமாணம் செய்தார்கள்.

இப்படிப்பட்ட அச்சுத்தாள் நிறுவனங்களுக்கெல்லாம் நிதியமைச்சர் ஷ்யூரிட்டி - அதாவது பிணையக் கையெழுத்து போட்டுள்ளார்.

இப்போது இந்திய ரூபாய் மதிப்பு அதள விதள பாதாள லோகத்திற்குள் போய் விட்டது. ஏற்கெனவே மூடி, ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் போன்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் இந்திய ரூபாயின் நம்பகத் தன்மையை மூன்றாம் நிலைக்குத் தள்ளி, ""இந்தியாவின் ரூபாயை நம்பாதே, போர்ச்சுக்கல் போல் இந்தியாவும் திவாலா ஆகும்"" என்று கூறிவிட்ட நிலையில், அச்சுத்தாள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாங்கிய முதலைத் திருப்பித்தரும்படி நோட்டீஸ் வந்துவிட்டது. ஷ்யூரிட்டி கையெழுத்திட்ட மைய அரசையும் வாங்கிய பணத்தைச் செலுத்துமாறு வக்கீல் நோட்டீஸ் வழங்கியதால் இப்போது இந்திய அரசு அன்னிய முதலீட்டு நிறுவனங்களுடன் பஞ்சாயத்து செய்து வருகிறது. ""வட்டியைத் தள்ளுபடி செய்யுங்க. கொஞ்சம் கொஞ்சமாக முதலை வழங்கிவிடுவார்கள்.....'' என்று தாஜா செய்கிறது.

அன்னியக் கடன் பெற்ற அச்சுத்தாள் கார்ப்பரேட்டுகள் இப்போது ""டெலிவரேஜிங்"" செய்கிறார்கள். அதாவது, இனிமேல் அன்னியக்கடன் வாங்காமல் தாவர ஜங்கம சொத்துகள் ஏதாவது இருந்தால் விற்பார்கள். மஞ்சள் காகிதம் கொடுப்பார்கள். இதனால் நாம் கற்க வேண்டிய பாடம் என்னவென்றால், அரசு தப்பு செய்யும், ஆனால் தனியார் நிறுவனம் தப்பு செய்யாது என்பது உண்மை இல்லை. தன்னை நம்பாமல் அடுத்தவரை நம்பினால் கெட்டுப்போவோம் என்ற பஞ்சதந்திர உண்மை இதில் வெளிப்படுகிறது.

2001-இல் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்தபோது, அடல்பிகாரி வாஜ்பாய் பொதுத் துறையில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை உருவாக்கியதை நினைவில் கொண்ட காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் உண்மையில் பா.ஜ.க-வில் இருக்க வேண்டியவர்.

மாநில அரசின் டெல்லி மெட்ரோ திட்டத்தை மிகத்திறமைசாலியான பொதுத்துறை நிர்வாகி ஈ. ஸ்ரீதரனை நியமித்து மிக அற்புதமான முன்னுதாரணத்தை நெருக்கடியான நேரத்தில் உள்கட்டமைப்பு நிர்வாகம் செய்து, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிய விஷயம் பாராட்டப்பட வேண்டும். இப்படிப்பட்ட முன்னுதாரணங்களே இன்றைய தேவை.