017

அப்பாவி 60% + பாவி 11% + இரண்டும் கெட்டான் 20% + நல்லவர்கள் 9% >>> 72138999 தமிழர்கள்!!!

- டாக்டர் க. ப. அறவாணன்

உலக நாடுகளில், இனப்பற்று மிகுந்த மக்கள் : ஸ்வீடன் 97%; அயர்லாந்து 97%; கிரேக்கம் 97%; டென்மார்க் 96%; பிரான்சு 92%; இத்தாலி 91%; ஸ்பெயின் 90; பிரிட்டன் 87; ஜெர்மனி 86; ஆலந்து 79%; ---இப்புள்ளிவிவரப் பட்டியலை அளித்தவர், s.sachchithanantham-La France et Les Francais, p. 376.

[இந்தியர்களில், மலையாளி 100%; கன்னடன் 100%; தமிழன்...???]

ரூத் பெனடிக் [Ruth Benedict] என்னும் மானுட இயல் அறிஞர், Pattern of Culture [pp. 57, 131, 123, 173] என்னும் நூலில் உலகில் உள்ள பல்வேறு இனத்தவரின் போர்க் குணங்களை ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

அவற்றில் சிலவற்றை, ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’ என்னும் தம் நூலில் மேற்கோள் காட்டிய தமிழறிஞர், டாக்டர் க.ப.அறவாணன் அவர்கள், தமிழன் தன்மானம் குன்றி வாழ்ந்ததற்கான காரணங்கள் பலவற்றையும் விவரித்திருக்கிறார்.

குணங்களின் அடிப்படையில் அவன் வேறு வேறாகப் பிரிந்து கிடந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். அவை?

மேலே படியுங்கள்.

ஒன்று:

அப்பாவித் தமிழர்கள் - தண்ணீர்ப் பாம்பு வகையினர் [60%]

இவர்கள் களிமண்ணைப் போன்றவர்கள். திரைப்படம், மேடைப்பேச்சு முதலான கவர்ச்சிகள் மூலம் இவர்களை மிக எளிதாக அடிமை ஆக்க முடியும். தமக்கென்று நிலையான எந்தவொரு கொள்கையும் இல்லாதவர்கள். கடவுளையும் கர்மாவையும் முன்னிறுத்தி இவர்களை முட்டாள்களாக்கிப் பின்பற்றச் செய்வது எளிது. இவர்கள் எப்போதும் திரைப்பட / அரசியல் / மத / சாதித் தலைவர்களைச் சார்ந்தே வாழ்வார்கள்.

இரண்டு:

பாவித் தமிழர்கள் [அயோக்கியர்கள்] - நாகப் பாம்பு வகையினர் [11%]

தமிழ்ச் சமுதாயத்தில் 11 விழுக்காட்டினர் என்ற சிறுபான்மை எண்ணிக்கையினர் என்றாலும், மற்றவர்களை அழித்து வாழும் கொடிய குணமுடையவர்கள் இவர்கள்; பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்கள்; திருவள்ளுவர், ‘கயமை’ அதிகாரத்தில் வடித்துக் காட்டும் அனைத்துத் தீய குணங்களும் உடையவர்கள்; இவர்கள் கையிலேயே செல்வமும் செல்வாக்கும் அதிகாரமும் இருக்குமாறு எச்சரிக்கையுடன் செயல்படுபவர்கள்.

மூன்று:

இரண்டும் கெட்டான் தமிழர்கள் - தவளை வகையினர் [20%].

தவளை, நீரிலும் நிலத்திலும் வாழ்வது போல இவர்கள் சூழ்நிலைக்கேற்ப நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் வாழத் தெரிந்தவர்கள்; நிலையான கொள்கையினர் அல்லர்; அங்கும் இங்குமாகத் தாவிக் கொண்டிருப்பவர்கள்; நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்.

நான்கு:

நல்ல தமிழர்கள் [யோக்கியர்கள்] - கோயில் யானை வகையினர் [09%].

தமிழரிடையே மிகச் சிறுபான்மையினராக இவர்கள் உள்ளனர்; தன்னிடம் வலிமை வாய்ந்த இரு தந்தங்கள், ஆற்றல் மிக்க நீண்ட துதிக்கை, மிகப் பெரிய நான்கு கால்கள், பருத்த உடல், கூரிய இரு கண்கள் இருந்தும், தன்னைவிடப் பன்மடங்கு சிறிய பாகனுக்கும், அவன் கையில் உள்ள சிறு குச்சிக்கும் [அங்குசம்] கோயில் யானை அடங்கிக் கிடக்கிறது; தன்னுடைய பேராற்றலை அறியாமல் இருக்கிறது. அதைப் போலவே, இந்த நல்லவர்களும் தங்களிடமுள்ள பேராற்றலை அறியாமல் இருக்கிறவர்கள்; பதவிப் பாகனுக்கும் அதிகார அங்குசத்துக்கும் அடங்கிக் கிடப்பவர்கள்.

தமிழனை இவ்வாறு வகைப்படுத்திய அறிஞர் அறவாணன், தமிழரிடையே ‘மிக நல்லவர்கள்’ என்னும் பிரிவு சுத்தமாக இல்லை என்கிறார்.

சிறுபான்மையினராக நலிந்திருக்கும் நல்லவர்கள், தம்மைப் போலவே சிறுபான்மையினராக உள்ள அயோக்கியர்களுக்கு அடங்கிக் கிடப்பது வெட்கக் கேடானது என்று வருந்துகிறார் முன்னாள் துணைவேந்தர்.

தமிழன், தன் அடிமைக் குணத்திலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகளையும் ஆராய்கிறார். அவர் ஆரய்ந்து சொல்லும் வழிகளில் சில..........

சினிமா, மது, சாதி, மதம், கட்சி, கிரிக்கெட் போன்ற நேரத்தையும் உத்வேகத்தையும் வீணடிக்கும் விளையாட்டு, தொலைக்காட்சி, நுகர்வுப் பொருள்கள் போன்றவற்றின் மீது கொண்டுள்ள மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

ஓர் இனம் வளர்வதற்கும், உயர்வதற்கும், தளர்வதற்கும், தாழ்வதற்கும் முதன்மைக் காரணம், அவ்வினத்துக்கு அவ்வப்போது அமையும் தலைமை ஆகும்.

முகமது நபி தலையெடுப்பதற்கு முன்பு அரேபியரிடையே ஓயாத போர்கள் நடை பெற்றன. அவர்களை நபி மனம் மாற்றினார்; ஒன்றுபடுத்தினார். உலகத்தின் சரிபாதி நபி நாயகத்தின் பக்கம் சேர்ந்தது.

சிறந்த போர் வீரர்களாக இருந்தும் தமக்குள்ளே சண்டையிட்டு மடிந்ததால், மங்கோலியரால் அரசு எதையும் நிறுவ முடியவில்லை. செங்கிஸ்கான் தலையெடுத்து, உலகின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டினார். அவர் வழி வந்த தைமூர் மன்னனின் கொள்ளுப் பேரனே பாபர்.

அலெக்ஸாண்டரால் கிரேக்க இனம் பெருமை பெற்றது. அசோகனால் மௌரிய இனமும், அக்பரால் இசுலாமிய இனமும், மாசேதுங்கால் சீன இனமும், ஹோ-சி-மின் ஆல் வியட்நாமிய இனமும் பெருமை பெற்றன.

சிங்கப்பூர், சீனா முதலான நாடுகளின் வேகமான வளர்ச்சிக்கு அந்நாட்டுத் தலைவர்களும் அந்நாட்டு அரசியல் சாசனங்களுமே காரணம் ஆகும்.

நம் மாநிலத்தில் வாழும் தமிழினம் முன்னேற வேண்டுமானால், இங்கே மிகச் சிறந்த தன்னலம் கருதாத தலைமை தேவை.

அரசியல் தலைவர்களையும் தலைவிகளையும் மிதமிஞ்சிய வழிபாட்டு வார்த்தைகளால் அர்ச்சித்தும் பூசித்தும் வெட்டுருவங்களை [cut out] நிறுத்தியும் சுவரொட்டிகள் ஒட்டியும் பக்தி பாவம் வளர்ப்பதை இங்கு உடனடியாக நிறுத்த வேண்டும்.

சுருங்கச் சொன்னால்...........

சிறந்ததொரு தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் தமிழனின் அறிவுக்கூர்மை வெளிப்பட வேண்டும். அப்போதுதான், தமிழன் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பான்.