028

யானையின் தமிழ்ப்பெயர்கள்

- மோகனசுந்தரம் .... ( மின்அஞ்சல்வழி )

"கைம்மா" ன்னா யானையா ?

ஒவ்வொரு மொழியிலும் அதற்கென்று பல சிறப்புகளை கொண்டிருக்கும், சில மொழிகள் 'adopted' என்று சொல்லக்கூடிய ஒரு மொழியையோ அல்லது பல மொழிகளையோ சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் இல்லாமல் தமிழ் மொழி சிறப்புகளைக் கொண்டிருப்பது ஆய்வுக்கு உரியது.

ஒரு உதாரணம், யானை என்ற சொல்லுக்குப் பல பெயர்களையும் பொருள்களையும் கொண்டிருக்கிறது தமிழ் மொழி. அதே போல யானையின் பல வகைகளையும் அதன் வாழ்க்கையையும், பாலின வேறுபாடுகளையும், குண நலன்களையும், இனங்காட்டவே பல சொற்கள் பிறப்பிக்கப்பட்டு சங்ககாலத்தில் இருந்து பேச்சு வழக்கிலும், இலக்கியங்களிலும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்.

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)


பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி


யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி


இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களப மென்றென் பூசுமென்றாள்
மாதங்க வேழ மென்றேன் தின்னும் என்றாள்
பக டென்றேன் உழம் என்றாள்
பழனம் தன்னை கம்பமா என்றேன் நற்களியாமென்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.{ - அந்தகக் கவி வீரராகவ முதலியார்- }

அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனனவி கேட்கிறாள்.

புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார். அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்

புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.

இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.

புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.

இந்த பாடலில் இரு பொருள் தருபவை

களபம் -யானை;சந்தனம்:
மாதங்கம் -யானை; மா(பெறிய)தங்கம்
பம்பு சீர் வேழம் (நற்குணமுடைய) யானை
கரும்பு பகடு -யானை;எருமைக் கடா
கம்ப மா (எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கும் யானை) - கம்பு என்னும் தானியத்தில் செய்யப்பட்ட மா களி செய்ய உதவும். கைம்மா (தும்பிக்கையுடைய யானை)


யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.