030

தளர்ந்து விட்ட தமிழ் ஆராய்ச்சி!

- க.ப. அறவாணன் - (26-7-2014 தினமணி நாளிதழில்)

தமிழ் ஆராய்ச்சி 1950-60களில் அறிவுபூர்வமாக மிக உச்சத்தில் இருந்தது. இந்தக்கால கட்டத்தில்தான் இந்திய மொழிகளிலேயே முதலாவதாக லெக்சிகன், பேராசிரியர் எஸ். வையாபுரிபிள்ளை தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக வழி வெளிவந்தது. தமிழில் கலைக்களஞ்சியம் அறிஞர் பெ. தூரனால் உருவாக்கப்பட்டுத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப் பெற்றது.

தமிழ்த்தாத்தா எனப் போற்றப்பெறும் உ.வே. சாமிநாதய்யரால் தமிழில் மிகப் பழைய இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலான சங்க இலக்கியங்களும், குமரகுருபரால் எழுதப்பட்ட பிரபந்தத் திரட்டும், உ.வே.சா.வின் தன் வரலாற்றைக் கூறும் என் சரித்திரம் எனும் அரும்பெரும் நூலும் அ. சிதம்பரநாத செட்டியாரால் பதிப்பிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதியும் வெளிவந்தன.

யாழ்ப்பாணத்து அறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியமும், யாழ்ப்பாணப் புலவர் கணேசய்யரால் குறிப்பு எழுதப்பட்ட தொல்காப்பிய உரைகளும் சி.கே. சுப்பிரமணிய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட பெரிய புராண உரையும் தேவாரத் திருவாசகம் முதலான இன்னபிற பக்தி இலக்கியங்களும் தமிழில் அச்சேறி உலா வந்தன.

திருக்குறள் பதிப்பிக்கப்பட்டதுடன் ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவரால் இலத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்டுத் தொடர்ந்து ஜி.யு. போப்பால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுத் திருக்குறள் ஐரோப்பாவில் உலா வரத் தொடங்கியது. இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழ் மொழி இலக்கிய வளமையும், இலக்கண வளமையும் குறிப்பாகப் பக்தி இலக்கியச் செழுமையும் உடையது என்பது உலகளாவ நிறுவப்பட்டது.

ஒப்பியல் அறிஞர் கால்டுவெல் தமிழ் மொழியை ஏனையத் தென்னிந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுத் தமிழின் தனித்தன்மையைத் தம்முடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் வழி தெளிவுபடுத்தினார். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தைப் பயின்று, நேசித்து அறிஞர் ஜி.யு. போப் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்தார்.

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி தென்னிந்திய வரலாற்றையும், சோழர் வரலாற்றையும் இன்னபிறவற்றையும் ஆங்கிலத்தில் எழுதிப் புலப்படுத்தினார். தொடர்ந்து தொல்பொருள் துறையில் டி.வி. மகாலிங்கமும், தத்துவத் துறையில் டி.எம்.பி. மகாதேவனும், தமிழரோடும் தமிழ்நாட்டோடும் தொடர்புடைய செய்திகளை உலகத்தினர் கண்டுகொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதினர்.

சென்னைப் பல்கலைக்கழகத்திலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பேரறிஞர்கள் பலர் பணிபுரிந்தனர். அவர்கள் வழி உயர் தரமுள்ள ஆராய்ச்சி நூல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்தன.

தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் திருக்குறளும் கம்ப இராமாயணமும் பலவேறு பதிப்புகளைக் கண்டன. தமிழகம் எங்கும் தமிழ் மொழி அறிவுப்பூர்வமாக உணரப்பட்டு, பயிலப்பட்டது. தமிழ் மொழிப் புலமைக்கு எனப் புலவர், வித்வான், பி.ஒ.எல். ஹானர்ஸ் பட்டங்கள் பல்கலைக்கழக அளவிலும் சிறந்த கல்லூரிகளிலும் அறிமுகமாயின.

பேரறிஞர்களைத் தன் வரலாற்றில் தொடர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்க அறிஞர்கள் தோன்றினரா, தொடர்ந்து வளப்படுத்தினரா என்பது இன்றளவில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

முன்னைய காலத்தை விட, தமிழ் எம்.ஏ. கல்வி ஆயிரக்கணக்கில் பல இடங்களில் பயிலப்படும் ஒன்றாகப் பரந்து விரிவடைந்துள்ளது. தமிழ்க் கல்வி அகலம் ஆன அளவுக்கு ஆழமுடையதாகப் பரவி உள்ளதா என்பது ஐயமாக உள்ளது. இன்றும் முற்கால அறிஞர்கள் படைத்த நூல்களே ஒரிஜினல் படைப்பாக உள்ளன. இன்றளவும் அவை முதல் தர நூல்களாகப் போற்றப்பெறுகின்றன.

இதுபோன்ற முதல் தர நூல்களைப் படைக்கும் முயற்சி நடைமுறையில் இல்லை. நம்முடைய பிஎச்.டி. ஆய்வேடுகள் முன்னைய நூற்களின் தொகுப்பாகவும், முன்னைய கருத்துகளின் தொகுப்பாகவும் மட்டுமே அமைந்துள்ளன.

அறிஞர்கள் மறைமலையடிகள்,மு. ராகவ அய்யங்கார், ரா. ராகவய்யங்கார் முதலானோர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சம புலமை பெற்றிருந்தனர். ஆங்கிலம், பிரெஞ்சு மொழி முதலான ஐரோப்பிய மொழிகளில் ஆராய்ச்சி நிகழ்த்துகிறவர் கட்டாயம் இலத்தீன் மொழியில் புலமை பெற்றிருக்கவேண்டும்.

அதனைப் போலவே தமிழ் மொழியில் புலமை பெற்றிருக்கிறவர்கள் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றிருத்தல் வேண்டிய ஒன்றாக இருந்தது. காலப்போக்கில் தமிழ் கற்றவர்கள் சமஸ்கிருதக் கல்வி கற்கும் போக்கு இற்றுப்போனது.

தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒருசேரக் கற்போர்க்கு பல்கலைக்கழகங்கள் வித்வான் பட்டத்தை வழங்கி வந்தன. அம்முறையே நின்றுபோயிற்று. தமிழ்க் கல்வி தமிழை மட்டும் கற்கும் கல்வியாகச் சுருங்கிப் போனது.

எஸ். வையாபுரிப்பிள்ளை, அ. சிதம்பரநாதன் செட்டியார், வி.ஐ. சுப்பிரமணியம் முதலானோர் தமிழோடு ஆங்கிலத்திலும் எழுதுவதிலும் பேசுவதிலும் ஆற்றல் பெற்றிருந்தனர். எனவே, அனைத்துலக அரங்கில் தமிழ் மொழி எளிதாக அரங்கேறியது.

மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்திய இயல் துறைத் தலைவராகப் பொறுப்பு வகித்த இலங்கை அறிஞர் தனிநாயக அடிகள் தமிழ், இலத்தீன் முதலான மொழிகளையும் ஏனைய மொழிகளில் வளர்ந்துள்ள ஆய்வு எல்லையையும் நன்கு அறிந்திருந்தார். அவருடைய அயல் மொழிகளின் அறிவும் இலத்தீன் மொழி அறிவும் தமிழ் மொழியை உலக மொழிகளோடு ஒப்பிடும் ஆற்றலை வழங்கியது.

தமிழ் ஆராய்ச்சி தொடர்ந்து ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். அது அவ்வாறு நிகழாமல் தேங்கிவிட்டது. இந்நிலையை மாற்றித் தமிழ் ஆராய்ச்சியை மீண்டும் உயிர்ப்பிக்கவும், உலக அளவில் எடுத்துச் செல்லவும் சில ஆலோசனைகள்:

தனித் தமிழ்க் கல்வியுடன் ஆங்கிலக் கல்வியையும் ஊட்ட வேண்டும்.

தமிழ் படிப்போர்க்கு சமஸ்கிருத அறிவும் அல்லது ஏதேனும் ஒரு தென்னிந்திய மொழி அறிவும் கற்பிக்கப்பெற வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் டாக்டர் சி.பி. இராமசாமி அய்யர் துணைவேந்தராக இருந்தபோது தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமையில் தமிழ், வரலாறு, பொருளாதாரம் முதலான கலைப்பாடங்கள் படிக்கிறவர்களுக்கு அறிவியல் பாடம் ஒரு கட்டாயப் பாடமாக இருந்தது.

அறிவியல் படிக்கிறவர்களுக்குத் தமிழ் அல்லது தர்க்கம் அல்லது தத்துவம் முதலான கலைப்பாடம் கட்டாயமாக வைக்கப்பட்டிருந்தது. ஏனைய துறைகளான அறிவியல், வரலாறு, கலையியல் முதலானவற்றுடன் தமிழை இணைத்துக் கற்கும் நிலைமையும் ஆராயும் நிலைமையும் வளர்க்கப்பெற்றிருத்தல் வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம் தொடக்க காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் எம்.ஏ. தேர்வுத்தாள்களுடன் ஆய்வேடு வழங்கும் பழக்கம் கட்டாயம்.

சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. தமிழ் படிக்கும்பொழுதே 75 முதல் 100 பக்க அளவில் ஆய்வேடு வழங்குவது கட்டாயமாக இருந்தது. இந்த ஆய்வேடு வழங்கும் பழக்கம் தற்போது எல்லா இடங்களிலும் கைவிடப்பட்டு விட்டது.

தமிழ்க் கல்வியின் தர வீழ்ச்சிக்கு அஞ்சல் வழிக் கல்வி ஒரு காரணம் என்று கருதப்பெறுகிறது. குறிப்பாக சில பல்கலைக்கழகங்கள் அஞ்சல் வழிக் கல்வியை வணிகமயமாக்கியதன் விளைவு எம்.ஏ. பாடத்திற்குரிய தாள்கள் குறைக்கப்பட்டன. ஆய்வேடு வழங்கும் முறை நீக்கப்பட்டது.

அக்காலங்களில் எம்.ஏ. நிறைவுத் தேர்வு முதலாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு நிறைவுறும் தருவாயில் ஒருசேரப் பத்து தாள்களாக அமைக்கப் பெற்றிருந்தன. அமெரிக்க முறையை அப்படியே காப்பியடித்து, பருவமுறை கொண்டு வந்த பிறகு எம்.ஏ. கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்தது.

தமிழ் போன்ற மொழிப் பாடங்களைப் படிக்கிறபோது மனப்பாடம் மிக முதன்மையாகும். இரண்டாமாண்டு நிறைவுத்தேர்வு என்பதால் முதலாண்டு பாடங்களையும் கற்று மீண்டும் மீண்டும் ஓதி, இரண்டாம் ஆண்டு இறுதி வரை நெஞ்சில் நிறுத்த வேண்டியது தேவையாக இருந்தது. அத்தேவை நீக்கப்பட்டு முதல் பருவத்தில் சில பாடங்கள், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம், நான்காம் பருவம் என வினா விடைத்தாள்களைப் பிரித்த பிறகு படித்த பாடங்களை நினைவிலே இருத்த வேண்டிய தேவை இல்லாமல் போயிற்று.

ஒவ்வொரு பருவத்திலும் அப்பருவத்தில் நடத்தப்பட்ட பாடங்களைக் கக்கி விட்டால் முடிந்தது வேலை என்றாகி விட்டது. இது மொழிக்கல்விக்கு ஆகாத முறை.

புதுவைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஆங்கில மொழிக் கல்வி தனிப்பாடமாகவே இருந்தது. தமிழ் படிக்கிறவர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வி வேண்டாம் என்ற எதிர்ப்பின் விளைவாக அது கைவிடப்பெற்றது.

சில பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு ஒரு பாடமாக இருந்தது. மொழிபெயர்ப்பும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் என இரு பிரிவாக இருந்தது. இந்த இரு பிரிவுகளில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு என்ற பிரிவு கைவிடப்பெற்றது. இந்நிலை மாறவேண்டும்.

கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.