037

"தென் சீன கடல் படிப்பினையும் - தமிழ் ஈழமும்"

- மின் அஞ்சல் செய்தி

----------------------------------

ஐநா அவை என்பது ஏதோ சர்வ அதிகாரம் படைத்த அமைப்பு போலவும், ஐநா அவை நினைத்தால் நாளை மறுநாளே 'தமிழ் ஈழத்தை' அறிவித்து விடலாம், 'ராஜபக்சேவுக்கு தூக்கு தண்டனை அளித்துவிடலாம்' என்றெல்லாம் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதையெல்லாம் செய்யவிடாமல் 'அமெரிக்காவும், பான்கிமூனும், சையத் அல் ஹுசைனும்' தான் தடுக்கிறார்கள் - என்றெல்லாம் சிலர் கற்பனையான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஐநா ஒரு மேலோட்டமான அமைப்பு மட்டுமே. உண்மையான அதிகாரம் படைத்தவை நாடுகள்தான் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது 'தென் சீன கடல்' தீர்ப்பு (South China Sea verdict).

----------------------------------

"தென் சீன கடல் எல்லை பிரச்சினை"

தென் சீன கடல் முழுவதும் தனக்கே சொந்தம் என்று அடாவடி செய்துவந்தது சீனா. பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேஷியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளின் கடல்பகுதிகள் முழுவதும் சீனாவுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்தது சீனா. செயற்கை தீவுகளை உருவாக்கி, அதில் இராணுவ தளத்தையும் அமைக்கிறது.

இதனை எதிர்த்து, தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது பிலிப்பைன்ஸ் நாடு. சீனா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் கையொப்பமிட்டுள்ள கடல்சட்டம் தொடர்பான உடன்படிக்கையின் (United Nations Convention on the Law of the Sea - UNCLOS) கீழ்தான் இந்த தி ஹேக் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, சர்வதேச சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நீதிமன்றமான சர்வதேச தீர்ப்பாயம் (Permanent Court of Arbitration - PCA) அளித்த தீர்ப்பில் 'தென் சீனக் கடல் பகுதிக்கு, சீனா, வரலாற்று ரீதியாக உரிமை கோருவதற்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை' என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு பின்னரும், 'இந்த தீர்ப்பை ஏற்க முடியாது. தென் சீன கடல் சீனாவுக்கே சொந்தம்' என சீனா திட்டவட்டமாக கூறி விட்டது.

----------------------------------

"சீனாவை எதுவும் செய்ய முடியாது"

இந்த சர்வதேச தீர்ப்பு, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஒரு தார்மீக பலத்தை மட்டுமே அளிக்கும். பன்னாட்டு அரங்குகளில் மற்ற நாடுகள் பிலிப்பைன்சுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். ஆனால், தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தையோ, அதன் கடற்படை தளம் அமைக்கும் முயற்சியையோ - உலகின் எந்த நாடும் நேரில் தலையிட்டு தடுக்காது.

பன்னாட்டளவிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரமிக்க ஐநா பாதுகாப்பு சபையில் சீனா வீட்டோ அதிகாரத்துடன் இருப்பதால் - சீனாவுக்கு எதிராக எந்த நாடும் எதுவும் செய்ய முடியாது என்பதே இன்றைய நிலைமை.

----------------------------------

"ஐநா தார்மீக பலத்தை மட்டுமே அளிக்கும் - நேரடியாக நடவடிக்கை எடுக்காது!"

பன்னாட்டு சட்டப்படி, சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே, தான் ஏற்க முடியாது என தூக்கி எறிந்து விட்டது சீன நாடு. இனி, உலக நாடுகள் - குறிப்பாக அமெரிக்காவும், கிழக்காசிய நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமாக, படிப்படியாகத்தான் தென் சீன கடலில் சீனாவை கட்டுப்படுத்த முடியும். பன்னாட்டு ராஜதந்திரம் என்பது இப்படியாகத்தான் போகும்!

சர்வதேச அரங்கில் ஐநாவுக்கு என்று பிரத்தியோக அதிகாரம் எல்லாம் கிடையாது. ஒரு பன்னாட்டு சிக்கலில் எத்தனை நாடுகள் ஆர்வம் செலுத்துகிறார்களோ, அதுவும் எத்தனை பலம் வாய்ந்த நாடுகள் ஆர்வம் செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அந்த சிக்கல் கவனம் பெரும்.

எனவே, பன்னாட்டு அரசியலில் தமிழீழ போராட்டம் என்பது அதிகமான நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதும், ஐநாவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை தொடர்ந்து இழுத்துச்செல்வதுமே ஆகும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு - ஐநா அவையின் மூலம் - சுதந்திர தமிழீழத்தை அமைப்போம், கூடவே சேர்த்து, சுதந்திர காஷ்மீரம், சுதந்திர மணிப்பூர், சுதந்திர பாலஸ்தீனம், சுதந்திர குர்திஸ்தான் எல்லாம் அமைப்போம் - என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் - பேசுவதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். நடைமுறையில் எதுவும் இருக்காது.

பன்னாட்டு அரங்கில் இலங்கையை மட்டும் தனிமைப்படுத்தி, மற்ற நாடுகளின் நட்பை நாட ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் முன்வர வேண்டும். பன்னாட்டு அரசியல் அரங்கில் வேறு பாதை எதுவும் இல்லை.